Amdebt’s Blog

முடிவுக்கு வந்த பாரம்பரியம் -13

டிசம்பர் 4, 2008 · 2 மறுமொழிகள்

ஜே.பி.மார்கன் நிச்சயம் தனது கல்லறையில் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பார். ஒரு காலத்தில் அமெரிக்காவை நிதி நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக அந்நாட்டு அரசுக்கே கடன் கொடுத்தவர் அவர். இன்றோ அவரது முன்னோடி முயற்சியினால் உருவான முதலீட்டு வங்கிகள் அரசின் முன் கைகட்டி நிற்க வேண்டிய நிலை ஏற்பட் டிருக்கிறது. 

 ஒரு கோடி சம்பளம்

ஐஐஎம் பட்டதாரிகளுக்கு அதிக சம்பளத்தில் வேலை தானாக தேடி வரும் என்பது தெரிந்த விஷயம். சர்வதேச நிறுவனங்கள் ஐஐஎம் கேம்பஸ்களுக்கே ஓடோடி வந்து அங்குள்ள எம்பிஏ பட்டதாரிகளை கொத்திக் கொண்டு செல்வது வழக்கமாக இருக்கிறது.

ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் ஐஐஎம் பட்டதாரிகள் வேலைக்கு அமர்த்தப்பட்ட செய்தி கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தியில் இந்த பட்டதாரி களை முதலீட்டு வங்கிகள் வேலைக்கு அமர்த்தியதாக நீங்கள் படித்திருக்கலாம்.

தற்போது சிக்கலுக்கு உள்ளாகி இருக்கும் முதலீட்டு வங்கிகள்தான் இப்படி இந்திய பட்டதாரிகளை தேடி வந்து பணிக்கு அமர்த்திக் கொண்டன. அபாயங்களை கணித்து முதலீட்டு வாய்ப்புகளை பெருக்க தேவைப் படும் ரிஸ்க் நிர்வாகத்தில் கை கொடுப்பார்கள் என்றே இவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். 

நிதித்துறையின் மகாராஜாவாக விளங்கிய மார்கன், உலக நிதித் துறை தலைநகரை லண்டனில் இருந்து நியூயார்க்கிற்கு மாற்றிக் காட்டியவர். பணத்தை திரட்டு வதிலும், அதனை பெருக்குவதிலும் மன்னராக திகழ்ந்த மார்கன், தனக்கு பின்னர் மாபெரும் நிதி சாம்பிராஜ் யத்தை விட்டுச் சென்றார். அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி அமெரிக்காவில் முதலீட்டு வங்கிகள் மாபெரும் வளர்ச்சி யடைந்தன.

வங்கிகளின் இலக்கணத்திற்கும், விதிகளுக்கும் கட்டுப்படாமல் விஸ்வரூப வளர்ச்சிப் பெற்ற முதலீட்டு வங்கிகள் மற்ற வங்கிகளை சாதாரண வங்கிக ளாகவே பார்க்க வைத்தன.

இந்த துறையில்தான் எத்தனை கம்பீரமான நிறுவனங்கள் இருந்தன. அவைதான் எத்தனை செல்வாக் கோடு விளங்கின. கோல்டுமேன் சாக்ஸ் மற்றும் மெரில் லின்ச் ஆகிய பெயர்களை சொன்னாலே நிதித் துறையில் எத்தகைய மதிப்பு இருந்தது. அதிலும் குறிப்பாக முன்னணி முதலீட்டு வங்கியாக இருந்த கோல்டுமேன் சாக்சை மற்ற வங்கிகள் அண்ணாந்து தானே பார்த்துக் கொண்டிருந்தன. மிகப் பெரிய வங்கிகள் கூட கோல்டுமேன் சாக்ஸ் செயல்பாடு களை பொறாமையோடுதானே பார்த்தன.

கோல்டுமேன் சாக்ஸ் போல இருக்க வேண்டும் என்பது வங்கிகளின் எட்டாக்கனியாக அல்லவா இருந்தது. தலை சிறந்த எம்பிஏ பட்டதாரிகளும், நிதித்துறை மேதைகளும் கோல்டுமேன் சாக்சில் பணியாற்றுவதை பாக்கியமாக அல்லவா கருதி வந்தனர். ஐஎம்எப் போன்ற சர்வதேச நிதி அமைப்புகளும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் மைய வங்கிகளும், நிதி அமைப்புகளும் இந்நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்களை நம்பிதானே முக்கிய பொறுப்புகளை ஒப்படைத்து வந்தன.

மற்ற முன்னணி முதலீட்டு வங்கிகளான மெரில் லின்ச், மார்கன் ஸ்டான்லி, லேமான் 
பொதுமக்களிடம் இருந்து டெபாசிட்களை திரட்டி அவற்றைக் கொண்டு கடன் வழங்குவதுதான் வங்கிகளின் அடிப்படை. முதலீட்டு வங்கிகள் அப்படி அல்ல. டெபாசிட் வசூலிக்க வேண்டிய தேவை இல்லாமல் வர்த்தக நிறுவனங்கள் பங்குச் சந்தை மூலமும் பல்வேறு வகை கடன் பத்திரங்கள் மூலமும் நிதி திரட்ட உதவுவதன் மூலம் முதலீட்டு வங்கிகள் வருவாயை தேடிக் கொள்கின்றன.

நிதி ஆதாரம் அவற்றுக்கு ஒரு விஷயமே இல்லை. நினைத்த மாத்திரத்தில் அவற்றால் வங்கிகளிடம் இருந்து குறுகிய கால கடன்களை பெற்று அதனை முதலீடாக மாற்றி பண மழை கொட்ட வைக்க முடியும்.

ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் முதலீட்டு வங்கிகளுக்கு கமிஷன் மூலம் பெரும் தொகை லாபமாக கிடைத்து விடும்.

வங்கிகளுக்கும் முதலீட்டு வங்கிகளுக்குமான மற்றொரு முக்கிய வேறுபாடு, அபாயத்தை பற்றி கவலைப்படாமல் செயல்படுவது. எத்தனை பெரிய வங்கியாக இருந்தாலும் கடன் வழங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். கடன் தொகை திரும்பச் செலுத்தப்படு வதற்கான வாய்ப்புகளை கருத்தில் கொண்டே செயல்பட வேண்டும். மாறாக முதலீட்டு வங்கிகளோ வருவாய் ஆதாரத்தை மட்டுமே முக்கியமாக கருதி துணிந்து ரிஸ்க் எடுக்கும் சுதந்திரம் கொண்டவை. உண்மையில் ரிஸ்க் எடுக்கும் ஆற்றலும், அதன் மூலமான வருவாய் ஆகியவையே முன்னணி வங்கிகள் முதலீட்டு வங்கிகளாய் பார்த்து பொறாமைப்பட காரணமாக அமைந்தன.

மேலும் முதலீட்டு வங்கிகள், வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான இணைப்பு மற்றும் கையகப்படுத் தலுக்கும் ஆலோசனை வழங்கும் திறன் பெற்றவை. ஆலோசனை அளிப்பதன் மூலமும் வருவாயை அள்ளி வந்திருக்கின்றன. சுருக்க மாகச் சொன்னால் அவை தொட்ட தெல்லாம் பொன்னாகி கொண்டிருந்தன.

பல முன்னணி வங்கிகள் முதலீட்டு வங்கிச் சேவை அளிக்க தனிப் பிரிவு வைத்திருக்கின்றன என்றாலும் முதலீட்டுவங்கிகளாக மட்டுமே செயல்பட்டு வந்த கோல்டுமேன் சாக்ஸ் போன்றவை நிதித்துறை தேவதைகளாகவே கருதி ஆராதிக் கப்பட்டன. அமெரிக்க நிதித்துறை சிகரங்களாகவும் இவை விளங்கின.

நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த இந்த பெருமையும், செல்வாக்கும் சரிந்து போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 5வது பெரிய முதலீட்டு வங்கியான பியர்ஸ்டியர்ன்ஸ் சாதாரண கடன் நெருக்கடியில் சிக்கி தள்ளாடி மார்கன் சேஸ் வங்கியிடம் தஞ்சமடைந்த போது கூட முதலீட்டு வங்கிகளின் செல்வாக்கு கேள்விக்குறியாகும் என்று ஒருவரும் நினைக்கவில்லை.

ஆனால் லேமான் பிரதர்ஸ் திவாலானதுமே முதலீட்டு வங்கிகளை சுற்றியிருந்த மாயமெல்லாம் மறைந்து போய் விட்டது.

158 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க லேமான் பிரதர்ஸ் தனது வரலாற்றில் ஒரு காலாண்டு கூட நஷ்டமடையாத பெருமை உடையது என்ற போதிலும், சக வங்கிகள் தன்னோடு பரிவர்த்தனை செய்ய மறுக்கும் நிலைக்கு ஆளாகி திவாலானதாக அறிவிக்க நேர்ந்தது. கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் லேமான் பிரதர்சோடு தொடர்பு வைத்திருந்து அதன் கடன் பத்திரங்களில் வெவ்வேறு அளவு முதலீடு செய்திருந்ததால் ஒட்டு மொத்த நிதி  உலகையும் இந்த நிகழ்வு உலுக்கி விட்டது.

முதலீட்டு வங்கிகள் உருவாக்கிய மேம்பட்ட நிதி சாதனங்களில் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் ஒரு முக்கிய பங்குதாரர் என்பதால் லேமான் பிரதர்சின் வீழ்ச்சி அதனோடு உறவு கொண்டிருந்த ஏஐஜி இன்சூரன்ஸ் குழுமத்தையும் ஆட்டம் காண வைத்தது.

மூத்தவனை அப்பா விளாசித் தள்ளுவதை பார்த்த இளைய சகோதரர்கள் பொட்டிப் பாம்பாக அடங்குவது போல, லேமான் பிரதர்சுக்கு நேர்ந்த கதியைப் பார்த்த கோல்டுமேன் சாக்ஸ் மற்றும் மார்கன் ஸ்டான்லி என எஞ்சியிருந்த இரண்டு பெரிய நட்சத்திர முதலீட்டு வங்கிகளும், நாங்கள் வங்கிகளாக மாறிக் கொள்கிறோம் என்று கூறி விதிமுறைகளுக்கு கட்டுப்பட முன் வந்தன. இதனிடையே மெரில் லின்ச், பாங்க் ஆப் அமெரிக்கா வங்கியால் வாங்கப்பட்டு விட்டது.

கடிவாளம் இல்லாத குதிரைகளாக இருந்த இவற்றை நம்பி பயணம் செய்ய முதலீட்டாளர்கள் தயாராக இல்லை என்பதே இதற்கு காரணம்.

உண்மையில் இதனை அமெரிக்காவின் பொருளாதார கர்வத்திற்கு விழுந்த அடியாகவே கருத வேண்டும். கட்டுப்பாடுகளை தளர்த்துவதும், விதிமுறைகளை விலக்கி கொள்வதுமே நிதித்துறை வளர்ச்சிக்கான வழிகள் என்று அமெரிக்கா தீவிரமாக நம்பியது. வங்கிகளை அவற்றின் போக்கில் சுதந்திரமாக செயல்பட்டால் அவை செழித்து வளர்ந்து பொருளாதார வளம் ஏற்படும் என்பதே அமெரிக்காவின் பொருளாதார கோட்பாடாக இருந்தது.

மானியங்கள் போன்ற விஷயத்தில் உலகிற்கு ஒரு நீதி; தனக்கு ஒரு நீதி என நடந்து கொள்ளும் அமெரிக்கா, நிதித்துறைக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் தானே முன்னின்று உலகிற்கு வழிகாட்டியது.

இதன் விளைவாக அமெரிக்க நிதித்துறை உச்சத்தை தொட்டாலும், தற்போதைய சரிவிற்கு இதுவே முக்கிய காரணமானது

பகுப்புகள்: Uncategorized
குறிச்சொற்கள்: , ,

2 பதில்கள் இது வரை ↓

கருத்துத் தெரிவிக்கவும்