கடனே தான் வாழ்க்கையடா -22

கடனே தான் வாழ்க்கையடா

.

Sunday, 09 November, 2008    10:53 AM
.

உலகிலேயே அமெரிக்கர்கள்  தான்  புத்திசாலிகள் என்று சொன்னால் தாராளமாக ஏற்றுக் கொள்ளலாம். அமெரிக்கர்கள் இதுவரை வென்றுள்ள நோபல் பரிசுகளே இதற்கு சாட்சி.
அதே போல அமெரிக்காவை படித்தவர்கள் அதிகம் உள்ள நாடு  என்றும் சொல்லலாம். அந்நாடு முழுவதும் நிறைந்திருக்கும் முன்னணி பல்கலைக் கழகங்களும்,  புகழ் பெற்ற கல்லூரிகளும் இந்த எண்ணத்தை உறுதிப் படுத்துகின்றன.

.

ஆனால், அமெரிக்கா வளமான தேசமா? பொருளாதார சீர்குலைவு ஏற்படுவதற்கு முன்வரை அப்படிதான் உலகம் நினைத்துக் கொண்டிருந்தது.  ஆனால் அமெரிக்கர்கள்  அனுபவித்து வந்த  வளம் கடன் வாங்கியது என்னும்  நிதர்சனத்தை உலகம் இன்று புரிந்து கொண்டிருக்கிறது.

சராசரி அமெரிக்கர்களின் வாழ்க்கை கடனை அடிப்படையாக கொண்டே அமைந்திருந்தது என்பதை வீட்டுக்கடன்  நெருக்கடி யால் உண்டான விபரீதம் தெள்ளத் தெளிவாக உணர்த்தியுள்ளது.

கடன் ஆற்றில் பயணிப்பதை உணராமலே இருந்த அமெரிக்கர் கள்  அதன் விளைவாக இன்று கடன் வெள்ளத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.  அமெரிக்கர்களின் நிலை ஐயோ பாவம் என சொல்ல வைத்திருப்பதோடு, கடன் அபாயம் பற்றி அமெரிக் கர்களை யாருமே எச்சரிக்கவில்லையா? என்றும் கேட்க வைக்கிறது.

கடன் வளம் கண்ணை மறைத்ததால் அமெரிக்கர்கள் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனரே தவிர, எச்சரிக்கை  குரல்கள் எழுப்பப்படாமல் இல்லை.  தொலைநோக்கு பார்வை கொண்ட பல நிபுணர்கள் அமெரிக்க சமூகம் கடனுக்கு அடிமையாகி வருவதை சுட்டிக்காட்டி எச்சரித்து வந்துள்ளனர். அவற்றில் வலுவாகவும், கலை நயத்தோடும் எழுந்த குரலாக டேனி ஸ்கிக்டரை சொல்லலாம்.

அந்நாட்டின் பிரபல பத்திரிகையாளரான ஸ்கிக்டர், கடனில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அமெரிக்கர்களுக்கு புரிய வைப்பதற்காக   “”கடனில் தான் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்” (இன் டெப்ட் வீ டிரஸ்ட்) என்னும் பெயரில் முழு நீள செய்திபடம் ஒன்றை தயாரித்து வெளியிட்டார்.

வீட்டுக்கடன் நெருக்கடி வெடிப்பதற்கு ஓராண்டுக்கு முன்பே 2006ல்  இந்த செய்திப் படத்தை  உருவாக்கி விட்டார். 90 நிமிடம்  ஓடக்கூடிய இந்த படம், அமெரிக்கர்களின் கடன் மோகத்தை  அழகாக படம் பிடித்து காட்டியதோடு, அதன் பாதிப்புகளையும் சித்தரித்தது.

ஸ்கிக்டர், ஏபிசி நியூஸ், சிஎன்என் போன்ற முன்னணி தொலைக்காட்சி களில் செய்தி தயாரிப்பாளராக  பணியாற்றி யிருப்பதோடு,  பல முக்கிய செய்திப்படங்களையும் தயாரித்தவர். ஈராக் போரின்  உண்மையான பின்னணியை ஆராயும் வகையில் இவர்  உருவாக்கிய (தி வெப்பன்ஸ் ஆப் மாஸ் டிசெப்ஷன்) செய்திப்படம், அமெரிக்காவின் பொய்யான நிலைப்பாட்டை அம்பலப் படுத்தியது. செய்திகளின்  பின்னணி யில் உள்ள  உண்மைகளை  பிளந்து வெளியே  கொண்டு வரக்கூடியவர் என்பது பாராட்டப்படும் ஸ்கிக்டர், “இன் டெபட் வீ டிரஸ்ட்’ செய்திப்படத்தில் அமெரிக்கர்களின் கடன்  புத்தகத்தை தோலுரித்துக்  காட்டினார்.

 அமெரிக்கர்களின் மத்தியில் புத்தகத்தில் இருந்த கடன் கலாச்சாரம் எப்படி திட்டமிட்டு  உருவாக்கப்பட்டது என்பதை விவரித்து விட்டு, வங்கிகளும், கிரெடிட் கார்டு நிறுவனங்களும் கைகோர்த்துக் கொண்டு செயல்பட்டு எப்படி அமெரிக்கர் களை கடன்வலையில் சிக்க வைத்தன என்பதையும் விவரித்துள்ளார். கடன் மோகத்தால்  அமெரிக்கா எதிர் நோக்கியுள்ள  சிக்கல்களை, முன்கூட்டியே  எச்சரித்த ஸ்கிக்டர், இந்த செய்திப்படத்தின் நடுவே புரிய வைக்கும் விஷயங்கள் மிகவும் முக்கியமானவை.

ஒரு காலத்தில் தொழிற்சாலைகள்  நிரம்பியிருந்த அமெரிக்கா, வணிக வளாகங்கள் நிறைந்த நாடாக மாறியதோடு, உற்பத்தி செய்வதும் குறைந்து நுகர்வு கலாச்சாரம் தலைதூக்கியதே பிரச்சனையின் மூலக்காரணம் என்று அவர் கூறுகிறார். வங்கிகளும், கிரெடிட் கார்டு நிறுவனங்களும் கடன் வாங்கி பொருட்களை வாங்குவதை  ஊக்குவித்தன என்று சொல்லும் அவர்  கடன் முதலைகள் அமெரிக்கர்களின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் அதிகாரப்பூர்வமாக உணர்த்தி யுள்ளார்.  வங்கி அதிபர்களும், நிதி நிறுவன முதலாளிகளும் தங்கள் லாபத்திற்காக  விதிமுறைகளை அரசு தளர்த்த செய்த விதத்தையும், அவர் சுட்டிக்காட்டுகிறார்.

புலனாய்வு பத்திரிகையாளரான தமக்கே, கடன் வலையின் பின்னணியில் தெரிய வந்த விஷயங்கள் திடுக்கிட வைத்ததாக   கூறும் ஸ்கிக்டர், பலரும் கடன் பிரச்சனையை உணர்ந் திருந்தாலும், ஒவ்வொருவரும் அதனை தனிப்பட்ட பிரச்சனையாக நினைத்துக் கொண்டிருந்ததாகவும், உண்மையில் இது சமூக பிரச்சனை என்பதை யாருமே உணரவில்லை என்றும் கூறுகிறார்.  எல்லோருக்கும் சுலபக்கடன் வழங்கியதன் மூலம் கடன் வசதியை ஜனநாயக மயமாக்கியதாக சொல்லப் பட்டாலும், இதன் விளைவாக  கடனுக்கு அடிமையான நிலையே ஏற்பட்டது என்றும் தெரிவிக்கிறார்.

 கடன்பட்டு தவித்தவர்களின் அவலத்தை படம் பிடித்து  காட்டும் போதே, இதனால் ஏற்படக்கூடிய விபரீதத்தையும் ஸ்கிக்டர் தனது படத்தில் கோடிட்டு  காட்டியதாக  விமர்சகர்களால் பாராட்டப் படுகிறார்.  ஒரு காலத்தில் உலக நாடுகளோடு தனது வளத்தை பகிர்ந்து கொண்ட அமெரிக்கா, வெளிநாட்டு வங்கிகளிடம் கடன்பட்டு நிற்கும் தேசமாக மாறியிருப்பதையும் வேதனையோடு குறிப்பிடுகிறார். கடந்த 25 ஆண்டுகளாக ஏற்பட்டு வந்த மாற்றம் இது என்றும், இதன் விளைவாக  கடனுக்கு அடிமையான குடும்பங்கள் அதிகரித்திருப் பதையும் அவரது செய்திப்படம் உணர்த்துகிறது.

 நிலைமை கைமீறி போவதற்கு முன் ஏதாவது செய்தாக வேண்டும் என்னும் வகையில் தேசிய அளவில் ஒரு விவாதத்தை தனது  செய்திப்படம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.

இந்த நோக்கத்தில் அவர் தோல்வி அடைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். அவரைப் போன்ற நிபுணர்கள் எச்சரித்தும் கூட அமெரிக்கா விழித்துக் கொள்ளவில்லை. இந்த செய்திப்பட வெளியீடு தொடர்பான  பேட்டி ஒன்றில் ஸ்கிக்டர், “அதிகரித்து வரும் அமெரிக்கர்களின் கடன் பற்றி யாருமே பேசுவதில்லை’ என்று வருத்தப்பட்டதோடு, அமெரிக்கா வில் ராணுவ வளாகம் உட்பட எல்லா இடங்களிலும் கடன் முதலைகள் நுழைந்து விட்டன என்று கூறியிருக்கிறார்.

அவரது இந்த செய்திப்படம் பல  திரைப்பட விழாக்களில்  திரையிடப்பட்டது. இந்த படம் பேசும்  முக்கிய விஷயங்கள்  குறித்த  விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்காக  இந்த செய்திப்படத் திற்காகவென்றே  “இன் டெப்ட் வீ டிரஸ்ட்’ என்றும் பெயரில் இணைய தளம் ஒன்றை ஸ்கிக்டர் அமைத்திருக்கிறார்.

செய்திப்படத்தின் டிவிடியை  இந்த தளத்தின் மூலம் வாங்க முடிவதோடு,  கடன் கலாச்சாரம் தொடர்பான பிரச்சனைகளையும் தெரிந்து கொள்ள முடியும்.  இதற்காக தனியே  வலைப்பதிவு ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார்.

மேலும் வாரந்தோறும் கடன் பிரச்சனைகள் தொடர்பான செய்தி மடல் ஒன்றையும் வெளியிட்டு வருகிறார். அநேகமாக அமெரிக்கர்கள் தற்போது விரும்பி செல்லும் இணையதளங்களில் ஒன்றாக இந்த தளம் விளங்குகிறது.  அமெரிக்கர்கள் இப்போது கடன் நிவாரணியை தேடிக் கொண்டிருக்கின்றனர்.

வீதிக்கு வந்த அமெரிக்கர்கள் -21

அமெரிக்கா, தனது புதிய அதிபராக பாரக் ஒபாமா தேர்வு செய்யப்பட்டிருப் பதை கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் கருப்பர்களை அடிமைகளாக நடத்திய நாட்டில் கருப்பினத் தலைவரான ஒபாமா அதிபராக பதவிக்கு வந்திருப்பது, எல்லோரும் கூறுவதுபோல வரலாற்றுச் சிறப்பு மிக்கதுதான்.

.

ஒபாமாவை பற்றி பேசும்போது, கருப்பின மக்களின் எழுச்சிக்கான விதையை தூவிய மார்ட்டின் லூதர் கிங் தான் நினைவுக்கு வரவேண்டும். ஆனால், அமெரிக்கா தற்போதுள்ள நிலையில் அதன் பழைய அதிபர் ஒருவரையும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

 ஹைடெக் நாடோடி

 அவரிடம் சொந்தமாக லாப்டாப் இருக்கிறது. ஐபாட் இருக்கிறது. உயர்தர செல்போன் வைத்திருக் கிறார். ஓய்வு நேரங்களில் கிதார் வாசிக்கிறார். ஆனால் அவர் ஒரு வீடில்லாதவர். ஆம் அவருக்கென சொந்த வீடு கிடையாது. வாடகை கொடுக்கவும் வசதி இல்லை.

தொழில்நுட்ப வல்லுனரான அவர் பெயர் சேபா இண்பெர்கெட் மையங் களில் அமர்ந்தபடி லேப் டாப் கம்ப்யூட் டரை கொண்டே தனது வேலை களை முடித்து விடுகிறார் அவர். மாதந்தோறும் 3 ஆயிரம் டாலர்கள் வரை சம்பாதிக்கிறார். அவர் வசிப்பது பணக்கார நகரமான சான்பிரான் சிஸ்கோ நகரம் என்பதுதான். வாடகை கொடுத்து கட்டுப் படியாகாது. எனவே தான் நவீன நாடோடியாக திரிந்து கொண்டி ருக்கிறார். பூங்காக்களிலும், முகாம்களிலும் தங்கி காலத்தை கழித்து கழித்து விடுகிறார். அவரால் ஓட்டலிலோ, விடுதியிலோ அறை எடுத்து தங்க முடியும். ஆனால் அதற்கு மாதம் 1500 டாலர் வரை ஆகலாம். அந்த தொகை யை மாதந்தோறும் சேமித்து வந்தால் சில மாதங்கள் கழித்து, வாடகை வீடு எடுத்துக் கொள்ளாலமே என்ற எண்ணத்தில் நாடோடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும் ஓட்டலில் தங்கினால் குடிகாரர்களின் தொல்லைக்கு வேறு ஆளாக வேண்டியிருப் பதாகவும் கூறுகிறார். அதைவிட நாடோடியாக இருப்பதே மேலானது என்றும் தெரிவிக்கிறார்.

குளிப்பதற்கு பொது குளியலறை களை பயன்படுத்தும் அவர், அந்த குளியலறைகளையும், கழிவறை களையும் சுத்தம் செய்துவிடும் பழக்கத்தையும் கொண்டிருக்கிறார். விளிம்பு நிலையில் இருப்பவர்கள் மட்டும் அல்ல. அனைத்து தரப்பினருமே வீடில்லாதவர் களாகும் நிலைக்கு தள்ளப்பட்டு வருவதற்கு லேப்டாப் போடு உலாவும் இந்த வீடில்லாதவர் ஒரு வோதனையான உதாரணம்.

அவர் அமெரிக்காவின் 31வது அதிபரான ஹெர்பர் ஹுவர் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர். 1929ம் ஆண்டு முதல் 1932ம் ஆண்டு வரை ஹுவர் அதிபராக இருந்தார். அமெரிக்காவின் மோசமான அதிபர் என்னும் பட்டத்தை ஜார்ஜ் புஷ் இவரிடம் இருந்துதான் தட்டிப் பறித்திருக்கிறார்.

ஹுவர் பதவியேற்ற ஆண்டில்தான் அமெரிக்காவுக்கு சோதனைக் காலம் ஆரம்பமானது. 1929ம் ஆண்டு ஏற்பட்ட பங்குச் சந்தை வீழ்ச்சியை தொடர்ந்து அமெரிக்க பொருளாதாரம் சீர்குலைந்து, வறுமையும் வேலை யில்லா திண்டாட்டமும் வாட்டியது. இதனால் உலக நாடுகளின் பொருளா தாரம் பாதிக்கப்பட்டது. அமெரிக்கா வையும், அகில உலகையும் ஆட்டிப் படைத்த இந்த பொருளாதார மந்தநிலை மாபெரும் தேக்க நிலை (கிரேட் டிப்ரஷன்) என்பது குறிப்பிடப்படுகிறது.

இன்றளவும், பொருளாதார பாதிப்புகள் பெரிய அளவில் ஏற்படும் போதெல்லாம், 1929ம் ஆண்டுக்கு பின் ஏற்பட்ட மாபெரும் தேக்க நிலை யோடு அவை ஒப்பிடப்படு கின்றன. வீடாக்கடன் நெருக்கடியால் சீர் குலைந்து போயிருக்கும் நவீன அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் கூட இந்த தேக்க நிலையை நினைவுப்படுத்து கின்றன. ஆம், அமெரிக்காவில் சரித்திரம் திரும்பியிருக்கிறது.

1929ல் தேக்க நிலை ஏற்பட அப்போதைய அதிபர் ஹுவரை காரணமாக கொள்ள முடியாது. ஆனால், தேக்க நிலையை சீராக்குவதில் அவரால் திறம்பட செயல்பட முடியவில்லை. உண்மையில் அவர் பொருளாதார வீழ்ச்சியை கட்டுப் படுத்த எதுவுமே செய்யவில்லை. அரசின் அதிகமான தலையீடு அல்லது கட்டுப்பாடு, அமெரிக்கர்களின் ஆதார குணமான சுயசார்பு மற்றும் தனித் தன்மையை அழித்துவிடும் என்பது நினைத்த ஹுவர், பொருளாதார பிரச்சனைகளை தீர்கக், தன்னார்வ முயற்சிகளே உதவும் என்பது நம்பினார்.

எனவே பொருளாதாரத்தில் நேரிடை யாக தலையிடாமல் தன்னார்வ முயற்சிகளையே ஊக்குவித்தார். அதன்பிறகு நேரிடையான நடவடிக் கைகளையும் மேற்கொண்டார். ஆனால் அவரது பதவிக் காலத்தில் பொருளா தாரம் மீளவேயில்லை. அடுத்த தேர்தலில் அவர் படுதோல்வி அடைந்தார்.

ஹுவர் பதவியில் இருந்த காலத்தில், வேலையில்லா திண்டாட்டமும், பஞ்சமும் ஏற்பட்டு, பலர் வீடுகளை யும், உடைமைகளையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இவர்கள் வேறு வழியில்லாமல் நகருக்கு வெளியே, ஒதுக்குப்புறமான இடத்தில் குடில்களையும், கொட்டகைகளையும் அமைத்து அவற்றிலேயே வசிக்கத் தொடங்கினர். பல்லாயிரக்கணக் கானோர் இப்படி புழுதி பறக்கும் மைதானங் களில், கொட்டகைகளில் வசிக்கும் அவல நிலை உண்டானது. இத்தகைய தற்காலிக குடியிருப்புகள், அதிபர் பெயரிலேயே ஹுவர் வில்லே என்றழைக்கப்பட்டன.

பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்த திடீர் சேரிகள் பற்றி கேள்வி பட்டிருக்க கூட மாட்டார்கள். ஆனால் இன்று இத்தகையே ஹுவர் வில்லேக்கள் அமெரிக்கா முழுவதும் தோன்றியிருப் பதை நேரில் கண்டு திடுக்கிட்டுப் போயிருக்கின்றனர். வீடில்லாத ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இந்த தற்காலிக கொட்டைகளில் தான் தஞ்சம் அடைந்திருக்கின்றனர்.

வளம் கொழிக்கும் நாடாக கருதப்படும் அமெரிக்காவில்தான் இந்த பரிதாப நிலை. போராலும், பெரும் பஞ்சத்தாலும் அவதிப்படும் நாடுகளில்தான் இத்தகைய நிலையை காணமுடியும். ஆனால் அமெரிக்கா விலோ வீட்டையும் வேலையையும் இழந்தவர்கள் தங்கள் நாட்டுக்குள்ளே அகதிகள் போல, கொட்டகைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
சியாடில், லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஆண்டிகுரியோ ஆண்டாரியோ என எந்த நகரும் இதற்கு விதி விலக்கல்ல.

சோம்பேறித்தனத்தாலும், தவறான வழிகளாலும், முயற்சி இல்லாததாலும் வேலை இல்லாமல், வீடில்லாத நிலைக்கு தள்ளப்பட்டவர்கள். மேலும் வீடில்லாதவர்களுக்கு அரசின் உதவி மற்றும் தொண்டு அமைப்புகளின் உதவி கிடைக்கும் என்பதால் இந்த நிலையை விரும்பி ஏற்றுக் கொள்ளவும் செய்தனர்.

ஆனால், தற்போதோ, நல்ல நிலையில் இருந்தவர்களும், நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் வீடில்லாதவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் இத்தகைய கதி தங்களுக்கு ஏற்படும் என்பதை கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை என்பது கண்ணீர் மல்க கூறுகின்றனர்.

வீட்டுக் கடன் நெருக்கடியும், வேலையில்லாத பிரச்சனையும், இந்த கதியை ஏற்படுத்தியுள்ளன. கடன் வாங்கி வீடு வாங்கியவர்களில் பலர் பாதித் தவணையை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகி, ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் ஒன்று தாங்களாகவே வெளியேறிவிட்டனர் (அ) வெளியேற்றப்பட்டு விட்டனர்.

முதலீடு நோக்கில், சுலபக் கடனில் வீடு வாங்கியவர்கள், கடனோடு சேர்த்து வீட்டையும் தலை மூழ்கி விடுவோம் என்றுவெளியேறி விடு பட்டு வருகின்றனர். ஆனால், சொந்த வீட்டுக் கனவில் கடன் வாங்கிய வர்கள், வீட்டை பறி கொடுத்துவிட்டு நின்றனர். இவர்களில் வாடகை கூட கொடுக்க முடியாதவர்கள்.

வீடில்லாதவர்களாகி, கிடைக்கும் இடத்தில் தங்கி கொள்கின்றனர். அதாவது நரகத்திற்கு வெளியே நரக வாழ்க்கை. இந்த குடியிருப்புகள் சட்டவிரோதமானவை  என்பதால், போலீசார் வந்து கொட்டகைகளை அப்புறப்படுத்தி விடும் வாய்ப்பிருக் கிறது. இதனால் பலர், நள்ளிரவில் வந்து படுத்து தூங்கிவிட்டு, விடியும் முன் எழுந்து சென்று விடுகின்றனர். ஆனால், நூற்றுக்கு மேற்பட்ட குடில்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களைப் பார்த்து, காவலர்களே பரிதாபப்பட்டு விட்டு விடுகின்றனர்.

நேற்று வரை, இரண்டு படுக்கை யறை கொண்ட வீடுகளில் வசித்தவர் கள், புழுதி பறந்த தரையில் கொட்டும் பனியிலும், குளிரிலும், நைலான் குடில்களில் படுத்துக் கிடக் கின்றனர். ஒரு சில நகர கடைகளும், தொண்டு நிறுவனங்களும் இவர்கள் மேல் கருணை கொண்டு, உணவு மற்றும் உடை ஆகிய வசதிகளை செய்து தருகின்றன. குடிலில் இருப்பவர்கள் குளிப்பதற்காக என்று தற்காலிக குளியல் அறைகளும் சில இடங்களில் அமைத்து தரப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட ஒரு முகாமில், ஆறு மாத கைக் குழந்தையோடு பெண்மணி ஒருவர் தங்கியிருப்பதை பார்த்து, திடுக்கிடவும் நேர்ந்தது. இதனை யடுத்து கர்ப்பிணிகள் தங்கியுள்ள குடில், குழந்தைகளுடன் அம்மாக்கள் தங்கியுள்ள குடில் என்றெல்லாம் வகைப்படுத்தி நிவாரண உதவி வழங்கி வருகின்றனர்.
கடன் சுமையால் வீடுகளை பறிகொடுத்தவர்கள் மட்டும் அல்லாமல், திடீரென வேலையை இழந்து, வாடகை கொடுக்க முடியாத, நடுத்தர வர்க்கத்தினர் பலரும், வீடில்லா தவர்களாகி குடில்களிலும், கொட்டகை களிலும் வசித்து வருகின்றனர்.

இன்றும் சிலரோ, வசிப்பதற்கு வீடில்லாத நிலையில், அதனை வெளியே காட்டிக் கொள்ளாமல் கவுரவமாக கார்களிலேயே வசித்து வருகின்றனர். இரவு நேரங்களில் காரிலேயே படுத்து தூங்கிவிட்டு, காலை எழுந்ததும் காரிலேயே சுற்றித் திரிகின்றனர். நடுவே எங்கேனும் பொது இடத்தில் குளித்துக் கொள்கின்றனர். இல்லை வாரம் ஒருமுறை ஓட்டலில் அறையெடுத்து தங்கி குளித்துக் கொள்கின்றனர்.

இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் மறைந்திருக்கும் வீடில்லாதவர்கள் என்றழைக்கப்படுகின்றனர். இந்த கவுரவமான வீடில்லாதவர்கள் நிலையும் பரிதாபமானதுதான். பார்க்கிங் செய்யக் கூடாத இடத்தில் காரை நிறுத்தி தூங்கினால் போலீசார் அபராதம் விதித்து விடுவார்கள். ஒதுக்குப் புறமான இடத்திற்கு சென்றால் அங்கே சமூக விரோதிகள் தொல்லை தருவார்கள். இவற்றின் நடுவே, வீடில்லாமல் இருக்கிறோம் என்ற உண்மை மற்றவர்களுக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சமும் விரட்டிக் கொண்டே இருக்கும். இளைஞர்கள், இடம் அல்லாமல் வயதான பெண்மணிகள் கூட இப்படி காரிலேயே வசிக்கும் நிலை இருக்கிறது. எல்லாம் காலத்தின் அலங்கோலம்தான்.

வீடில்லாமல் கார்களில் வசிப்பவர்களுக்கு நிலைக்கு இறங்கிய சான்டா பார்பரா நகர நிர்வாகம், அங்கே வீடில்லாதவர்களில் கார்களை இரவில் நிறுத்திக் கொள்வதற்காக என்று பிரத்யேக பார்க்கிங் வசதியை செய்து தந்திருக்கிறது. நிலைமை அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது. குறிப் பிட்ட சில நகர சபைகள் ஜப்தி நடவடிக் கைக்கு கட்டுப்பாடு விதித்துள்ளன.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக அமெரிக்காவில் இந்த பரிதாப நிலையே நீடிக்கிறது. வீடில்லாத வர்களின் எண்ணிக்கை முன் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நடுத்தர வர்க்கத்தை நடுத் தெருவுக்கு கொண்டு வந்ததோடு அமெரிக்காவாக மட்டுமே
இருக்க முடியும். ஈராக் போரிலும், ஆப்கானிஸ்தான் போரிலும், கோடி, கோடியாக டாலர்களை கொட்டிய படி, யுத்த மோகத்தில் பொருளாதார பிரச் சனையை கோட்டைவிட்ட அதிபர் ஜார்ஜ் புஷ் சாதித்திருப்பது இதுதான்!

இந்த பின்னணியில் தான் பாரக் ஒபாமா அதிபராக வந்துள்ளார். கருப்பர் இனத்தை தலைநிமிரச் செய்த அவர் இனி அமெரிக்காவை தலை நிமிரச் செய்ய வேண்டும். தற்போதுள்ள நிலையில் அதைவிட சவாலானது வேறில்லை

கந்துவட்டி கார்ப்பரேட் மயமானது -20

சாப்ட்வேர்  நிபுணர்களைப் போலவே, வட்டிக்கு கடன் கொடுப்பதில்  வல்லவர்களும், தொழில் வாய்ப்புக்காக அமெரிக்கா செல்லாம்! காரணம் இன்று அமெரிக்கா வில் செழிப்போடு விளங்குவது வட்டிக்கு கடன் கொடுப்பது தான்!

வளர் முகத்தில் இருப்பதும் இந்த தொழில் தான்!

வட்டிக்கு கடன் கொடுப்பது என்றால், ஏதோ நம்மூரில் இருப்பது போல, வட்டிக்கடைக் காரர்களையும், தண்டலுக்கு விடுபவர்களையும் போல நினைத்து கொள்ள வேண்டாம்.

.

ஒரு வங்கியைப் போல, நிதி நிறுவனத்தைப் போல, திட்டமிடப் பட்டு மிக அழகாக கடன் கொடுக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. செயல்பாட்டிலும் சரி, அளவில் சரி, கடன் கொடுப்பவர்கள் வங்கிகளுக்கு  நிகராகவே இயங்கி வருகின்றனர். சுருக்கமாகச் சொன்னால், வட்டிக்கு கடன் கொடுப்பதும் அமெரிக்காவில் நிறுவனமயமாகி இருக்கிறது.

———

 லாட்டரி வர்க்கம்

பொருளாதார நோக்கில் இரண்டு வர்க்கங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. ஒன்று முதலாளி வர்க்கம். மற்றொன்று உழைக்கும் வர்க்கம். இடைப்பட்ட நடுத்தர வர்க்கத்தை மறந்துவிடுங்கள். அமெரிக்காவிலோ முதலீட்டாளர் வர்க்கம், லாட்டரி வர்க்கம் என்ற பிரிவினையே நிலவுகிறது. 

முதலீட்டாளர் நல்ல வர்க்கம் என்றால், நல்ல சம்பளத்துடன் பணத்தை சேமித்து முதலீடு செய்து நிதித்துறை செயல்பாடுகளால் பயன் பெறுவார்கள்.

லாட்டரி வர்க்கம் என்றால், போதிய வருமானம் இல்லாமல், சேமிக்கும் வழி இல்லாமல் கடன் வாங்கி வாழ்க்கை நடத்துபவர்கள் என்று பொருள். இந்த வர்க்கத்தின் தான் பெரும்பான்மையினர் நிதித்துறை செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டதும் இவர்கள் தான்.

————–
இதில் பெருமைபடவோ, மகிழ்ச்சி அடையவோ எதுவுமில்லை! மாறாக இதன் பின்னே உள்ள கடன் வலைப்பற்றி தெரிந்து கொண்டால், திகைப்பாக இருக்கும். கடன் வாங்குவது, அமெரிக்காவில், சுலபமாகவும், இயல்பாகவும் இருக்கிறது என்பதே ஏற்கனவே பார்த்தோம். அமெரிக்க சமூகத்தில் கடன் எந்த அளவுக்கு புறையோடிப் போயிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள, வழக்கமான கிரிடிட் கார்டு கடன்களை எல்லாம் கடந்த பார்க்க வேண்டும்.
கிரிடிட் கார்டுகளின் கடன் வலை வெளிப்படையாக தெரிவது என்றால், கண்ணுக்கு தெரியாமல் விரிந்திருக்கும் வலைகளாக விதவிதமாக கடன்கள் அமெரிக்காவில் இருக்கின்றன.

கார் உரிமத்தின் மீதான கடன், வருமான வரிச் சலுகை மீதான கடன், பென்ஷன் மீதான கடன், காசோலை மீதான கடன், மாணவர்களுக்கான கடன் என சராசரி அமெரிக்கர்களுக் காக வழங்கப்பட்டு வரும் கடன்கள் எத்தனையோ இருக்கின்றன. இவற்றோடு சம்பள தினக்கடனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். உண்மையில் சம்பள தினக்கடனைப் பற்றி வரிவாக தெரிந்து கொண்டாலே அமெரிக்கர்கள் வாழ்வில் கடன் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

 

நின்ஜா கடன்கள்

பொருளாதார நோக்கில் இரண்டு வர்க்கங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. ஒன்று முதலாளி வர்க்கம். மற்றொன்று உழைக்கும் வர்க்கம். இடைப்பட்ட நடுத்தர வர்க்கத்தை மறந்துவிடுங்கள். அமெரிக்காவிலோ முதலீட்டாளர் வர்க்கம், லாட்டரி வர்க்கம் என்ற பிரிவினையே நிலவுகிறது. 
முதலீட்டாளர் நல்ல வர்க்கம் என்றால், நல்ல சம்பளத்துடன் பணத்தை சேமித்து முதலீடு செய்து நிதித்துறை செயல்பாடுகளால் பயன் பெறுவார்கள்.
லாட்டரி வர்க்கம் என்றால், போதிய வருமானம் இல்லாமல், சேமிக்கும் வழி இல்லாமல் கடன் வாங்கி வாழ்க்கை நடத்துபவர்கள் என்று பொருள்.
இந்த வர்க்கத்தின் தான் பெரும்பான்மையினர் நிதித்துறை செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டதும் இவர்கள் தான்..

———

சம்பள தினக்கடனை பற்றி பார்க்கும் முன்னர், நமது கலைவாணரின், மாதச் சம்பளம் வாங்குபவர்கள் பற்றிய தேதி ஒன்றிலிருந்து இருபதுவரை கொண்டாட்டம் என்னும் பாட்டை நினைத்துக் கொள்வோம். சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பவர் என்றும் அடைமொழிக்கு ஏற்ப இந்த பாடல் வரிகளின் மூலம் மிக அழகாக மாதச் சம்பளம் வாங்குபவர்களின் திண்டாட்டத்தை நகைச் சுவையோடு கலைவாணர் உணர்த்தி விடுவார்.

சம்பளப் பணம் 20 தேதி வாக்கில் தீர்ந்து விட, மாத கடைசியில் செலவுகளுக்கு வழி தெரியாமல் பிதுங்கி நிற்பது நடுத்தர மற்றும் கீழ் தரவர்க்கத்து குடும்பங்கள் தவறாமல் எதிர் கொள்ளும் அனுபவமாகவே இருக்கிறது. மாத கடைசி நாட்களை கழிக்க 50க்கும், 100க்கும் கையேந்தி நிற்பதை தவிர, வேறு வழியில்லை.

மாதக்கடைசியில் நெருக்கடி ஏற்பட்டால் சம்பளம் வந்தவுடன் தந்து விடுகிறேன் என்று தெரிந்தவர்களிடம் கடன் கேட்பதும் உண்டல்லவா? இந்த தேவை அமெரிக்கர்களுக்கு இல்லை! காரணம் அவர்களுக்கு சம்பள தினக்கடன் மூலம் கேட்காமலேயே கடன் கிடைத்து விடுகிறது.

சம்பள தினக்கடன் என்றால், அடுத்த மாத சம்பளம் வருவதற்கு முன் அந்த தொகையையே அடமானமாக வைத்துக் கொண்டு முன்னதாக வழங்கப்படும் பணமாகும்.  உதாரணமாக 300 டாலர் தேவை என்றால் 50 டாலரை முதலிலேயே வட்டியாக பிடித்துக் கொண்டு 250 டாலரை கையில் கொடுத்து விடுவார்கள். சம்பளம் வந்தவுடன் 300 டாலரை செலுத்தி விட வேண்டும்.

பெரிய அளவில் சேமிப்போ, வேறு எந்த நிதி ஆதாரமோ இல்லாத குடும்பங்கள் அவசர தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த சம்பள தினக்கடன் பழக்கத்திற்கு வந்தது. இந்த கடனை பெறுவது மிகவும் சுலமானது சமீபத்திய சம்பள ரசீது (அ) வங்கி கணக்கு அறிக்கையை காண்பித்தால் போதுமானது. அதையெல்லாம் விட, முன் தேதியிட்ட காசோலையில் கையெழுத்து போட்டு கொடுத்தாலே கூட போதும் தான்.

மேலோட்டமாக பார்க்கும் போது அட பரவாயில்லையே தேவை அறிந்து கொடுக்கப்படும் கடனாக இருக்கிறதே என்று நினைக்கத் தோன்றலாம். உண்மை அதுவல்ல. முதலில் இந்த கடனுக்கான வட்டி என்பது மிகவும் அதிகம். இரண்டாவதாக இந்த கடனுக்கு அடிமையாகிவிட்டால் மீளுவது கடினம். லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் இப்படி தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அவசரத் தேவைக்கு மோதிரத்தை அடமானம் வைத்து பணம் வாங்குவது சகஜமானது தான். ஒரு சிலர் காசோலையை அடமானமாக வைத்துக் கொண்டு கடன் தருவதும் உண்டு தான்.
ஆனால், இவை எல்லாமே அவசரக் காலத் தன்மை கொண்டவை மட்டுமே. கூடுமானவரை இந்த வகை கடன்களை தவிர்க்க வேண்டும் என்றே எல்லோரும் விரும்புவார்கள் அமெரிக்காவில் நிலைமை என்ன தெரியுமா? சம்பள தினக்கடன் என்பது பரவலாகவும், தவிர்க்க இயலாததாகவும் இருக்கிறது.

சம்பள தினக்கடன், உடனடி பணமாக முன் வைக்கப்பட்டு, விளம்பரம் செய்யப்படுகிறது. துரித உணவைப் போல துரித பணம், துரித உணவு கலாச்சாரத்திற்கு பழகிய அமெரிக்கர் களுக்கு துரித பணம் என்பது ஏற்புடையதாக அமைந்துவிடாது.

எனினும், துரித உணவு போல, துரித பணம் மலிவானதல்ல. ஆரம்ப வட்டியே அதிகம் என்பதோடு மீண்டும், மீண்டும் பயன்படுத்தும் போக வட்டி குட்டி போட்டுக் கொண்டே இருக்கும். கடன் வழங்கும் நிறுவனங்கள் அதை தான் ஊக்குவிக்கின்றன.

அதாவது முதல் மாத கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், அந்த பாக்கியை நிலுவையில் வைத்துக் கொண்டு புதிதாக கடன் வழங்க அவை தயங்குவதில்லை.
இந்த வகை கடன்களுக்கு சுழலும் கடன் என்பது பெயர். கிரிடிட் கார்டு நிறுவனங்கள் மத்தியில் இவை பிரபலமாக இருக்கின்றன. அசலை திருப்பிச் செலுத்த முடியாவிட்டாலும், பாதகமில்லை. வட்டியை செலுத்தி விட்டு, மேற்கொண்டு கடன் வாங்கி கொண்டேயிருக்கலாம். 

கடன் இவ்வாறு சேர்ந்தபடி வெளியே இருப்பதை தான் கிரிடிட் கார்டு நிறுவனங்கள் திட்டமிட்டு ஊக்குவிக்கின்றன. சம்பள தினக்கடன் வழங்கும் நிறுவனங்களும் இதையே தான் செய்கின்றன. எனவே மாதச் செலவுகளை சமாளிக்க முடியாதவர்கள் சுலபமாக கிடைக்கும் சம்பள கடனுக்கு ஆசைப்பட்டனர் என்றால் அதிலிருந்து விடுபடுவது மட்டும் சுலபம் இல்லை. கிட்டத்தட்ட கந்துவட்டிக்கு நிகரானது தான் இந்த நடைமுறை.

அமெரிக்கா முழுவதும், இத்தகைய சம்பள கடன் வழங்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மாதந்தோறும் 1.5 கோடி அமெரிக்கர்கள் இத்தகைய கடனை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவிலேயே கூட சம்பளக் கடன் வழங்குவது என்பது பழைய பழக்கம் தான். ஆனால், அந்த காலத்தில் இவை எப்போதாவது மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. தவிர கடன் வாங்குபவர்களுக்கு இது அபாயகரமானது என்பது உணர்வு வாட்டியெடுக்கும்.
நவீன அமெரிக்காவிலோ சம்பள தினக்கடன் இயல்பானதாக மாற்றப்பட்டு விட்டது. இந்த கடனை அளிப்பவர்கள் பளபளப்பான அலுவலகங்கள் மூலம் கவுரவமாக செயல்பட்டு வருகின்றன.

கடன் நிறுவன ஊழியர்கள் நேர்த்தியான உடையணிந்து, பவ்யமாக வந்து, கடன் தந்துவிட்டு செல்கின்றனர். இது மட்டும் அல்லாமல், சம்பள தினக் கடன் பெறுவது சகஜமானது என்ற தோற்றத்தையும் இந்நிறுவனங்கள் ஏற்படுத்தி விடுகின் றன. அதற்கேற்ப வசீகரமான வார்த்தை களோடு கவர்ச்சிகரமான விளம் பரங்களை  வெளியிடுகின்றன.

இந்த விளம்பரங்கள் வெகு கவனத்தோடு கடன் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டு “சம்பள முன்பண கணக்கு’ போன்ற புத்திசாலித்தனமான சொற்றொடர்கள் இடம் பெற்றிருக்கும். உங்கள் நிதிப் பிரச்சனைக்கான சுலபமான தீர்வு என விளம்பரங்கள் உறுதி அளிக்கும்.
அதாவது கடனுக்கான மொழியை அழகாக மாற்றியமைத்து கடன்படுவது  என்றும்  தவறேயில்லை  என்ற எண்ணம் உண்டாக்கப்படுகிறது.

இதே போலவே, வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு அந்த தொகை அரசால் திருப்பி அளிக்கப்படும் நடைமுறை உள்ளது. பல மாதங்கள் கழித்து வரக்கூடிய அந்த தொகைக்கு எதிராகவும் நிறவனகள் கடன் வழங்க தயாராக உள்ளன. பென்ஷன் காசோலை, அரசு தரும் நிதியுதவி காசோலை மிதெல்லாம் கடன் வழங்க பிரத்யேக நிறுவனங்கள் உள்ளன.
அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் கடன் தான். அப்பாவி அமெரிக்கர்கள் இந்த கடன் கலாச்சாரத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

விளம்பரம் மூலம் விரிந்த விபரீத வலை -19

  

செல்வச் செழிப்போடு வாழுங்கள்!

வளமோடு வாழுங்கள் என்று பெரியோர்கள் வழங்கும் ஆசியை போன்றதல்ல இந்த வாசகம். அமெரிக்காவின் முன்னணி வங்கி சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளி யிட்ட பிரபலமான விளம்பரத்தில் இடம் பெற்றிருந்த வாசகம்தான் இது.
விளம்பரத்தின் மையக் கருத்தும், இந்த வாசகத்தையொட்டியே அமைந்திருந்தது.

 

 

.
அமெரிக்கர்கள் வீட்டுக்கடன் நெருக்கடியில் சிக்கிக் கொண்டு தவிப்பதை பற்றி படிக்கும் போது, யாராவது தெரிந்தே வலையில் விழுவார்களா என்றுதான் கேட்கத் தோன்றும்.
ஆனால் ஐயோ பாவம் அமெரிக்கர்கள். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விளம்பரங்களின் மூலம் விரித்த வலையில் வசமாக மாட்டிக் கொண்டனர்.  

போதிய வருமானம் இல்லாதவர்கள் வீட்டுக்கடன் பெற்றது கூட வியப்பானதல்ல. அந்த வீட்டை அடிப்படையாக வைத்துக் கொண்டு மேலும் மேலும் கடன் வாங்கியதுதான் நம்ப முடியாமல் இருக்கிறது.

கடந்த 1980ம் ஆண்டுக்கு பிறகு வீடுகளின் மீது நிலுவையில் இருக்கும் கடன் 100 கோடி டாலர்களிலிருந்து 1 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. அந்த அளவுக்கு அமெரிக்காவில் வீட்டுக் கடன் தாராளமாக வழங்கப்பட்டு இருக்கிறது.

 இப்படியும் விளம்பரம்

 அமெரிக்காவில் பிக் பவுல் என்று சொல்லப்படும் பேஸ்பால் விளையாட்டு நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. ஒட்டு மொத்த அமெரிக்காவின் கவனத்தை ஈர்க்கும் இந்த நிகழ்ச்சியின் நடுவே விளம்பரம் செய்வது மிகுந்த பயனுள்ளதாக கருதப்படுகிறது.

வீட்டுக்கடன் செழிப்பின் உச்சத்தில் அமெரிகுவெஸ்ட் எனும் நிறுவனம் திடுக்கிட போக வைக்கும் அளவுக்கு ஒரு விளம்பரத்தை வெளியிட்டது.

விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் பெண்மணி ஒருவர் தனது சீட்டிலிருந்து எழுந்து கொள்ள முற்படும்போது தவறி பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்கும் ஆணின் மடியில் விழ இருக்கிறார். சக பயணிகள் எல்லாம் ஆவென்று வாயை பிளந்தபடி இதனை பார்த்துக் கொண்டிருக்கும் போது விளம்பரம் முடிந்து எதையும் அவசரப்பட்டு முடிவு செய்து விடாதீர்கள். நாங்கள் அவ்வாறு செயல்படுவதில்லை என்று வங்கி குறிப்பிடுவது போன்ற வாசகம் திரையில் தோன்றும்.

வீட்டுக்கடன் தொடர்பாகத்தான் இத்தகைய விளம்பரத்தை அந்த வங்கி வெளியிட்டது. எப்படி யெல்லாம் விளம்பரம் செய்து வீட்டுக் கடனை ஊக்குவித்திருக்கின்றனர் பாருங்கள்.

——————
ஏற்கனவே வீட்டுக்கடன் பெற்றவர்களுக்கு அந்த வீட்டின் மீதும் வங்கிகள் தயக்கமில்லாமல் கடன் வழங்கி இருக்கின்றன. பொதுவாக இதனை இரண்டாவது அடமானம் என்று சொல்வார்கள். கடன் அடைக்கப்படாமல் உள்ள நிலையில் அந்த வீட்டின் மீது கடன் வாங்க எவருக்கும் தயக்கமாக இருக்கும். தவிர்க்கவே முடியாத நிலையில் வேறு வழியில்லாமல், இரண்டாவது அடமானத்தின் மூலம் கடன் பெற முயற்சிப்பார்கள். அந்த கடனும் கூட முக்கிய தேவைக்காக இருக்கும்.  

ஆனால் அமெரிக்காவில் சர்வ சாதாரணமாக இரண்டாவது அடமானத்தின் மூலம் கடன் பெற்று வந்தனர். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த கடன்கள் இரண்டாவது அடமானம் என்று குறிப்பிடப்படவில்லை. அதற்கு மாறாக சமபங்கு கடன்கள் என்று கம்பீரமாக குறிப்பிடப்பட்டன.

அதாவது வீட்டின் உரிமை யாளருக்கு அதன் மீதுள்ள சமபங்கு உரிமையின் அடிப்படையில் வழங்கப்படும் கடன் என்று பொருள். 1990களுக்கு பிறகு அமெரிக்க வங்கிகள் இந்த கடனை அதிக அளவில் ஊக்குவித்தன. அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான சிட்டி பாங்க், உங்களது வீட்டில் 25 டாலர்கள் மறைந்து கிடக்கின்றன. அதனை வெளிக் கொண்டு வர நாங்கள் உதவுகிறோம் என்று ஒரு விளம்பரத்தில் வாடிக்கையாளர் களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. (ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட விளம்பரம்).

இரண்டாவது அடமானத்தின் மூலம் மேற்கொண்டு கடன் வாங்க, இல்லை, இல்லை, வீட்டின் சமபங் கின் மீது புதிதாக கடன் வாங்க அந்த வங்கி இதன் மூலம் ஆசை காட்டியது. அநேகமாக எல்லா வங்கிகளும் இந்த வகை கடன்களை முன்வைத்து அவற்றை பெற வசீகரமான விளம்பரங்களை வெளியிட்டன.

உதாரணத்திற்கு பிலீட் எனும் வீட்டுக்கடன் நிறுவனம் “உங்கள் அடமானம் உங்களை நெருக்கு கிறதா? நீங்கள் பதிலுக்கு அதை நெருக்குங்கள்’ என விளம்பரம் செய்து அடமானத்தின் மீது கடன் பெற தூண்டியது.

இதே நிறுவனத்தின் மற்றொரு விளம்பரம், “கடன் பெறுவதற்கான சிறந்த இடம் எது தெரியுமா? அது உங்களுடைய இல்லம்தான்’ என்று அறிவித்தது. பிஎன்சி வங்கி எனும் மற்றொரு வங்கி, “உங்கள் வீட்டிலிருந்து பணம் எடுக்க சுலபமான வழி’ என்று கூறி அடமான கடனை விளம்பரம் செய்தது. சிட்டி குழுமத்தின் மற்றொரு விளம்பரம், “உங்கள் வீட்டுக்காக நீங்கள் எவ்வளவோ உழைத்திருக் கிறீர்கள். இப்போது உங்கள் வீடு உங்களுக்காக உழைக்கட்டும்’ என்று தெரிவித்தது. 

இக்குழுமத்தின் இன்னொரு விளம்பரம், “10 ஆயிரம் டாலருக்காகவோ, 20 ஆயிரம் டாலருக்காகவோ உங்கள் வீட்டை விற்க வேண்டியதில்லை’ என்று  கூறியது. இதன் பொருள் வீட்டின் மீதே புதிதாக கடன் வாங்கிக் கொள்ளலாம் என்பதுதான்.

மற்றொரு வங்கியின் விளம்பரம், “பணம் தேவையா? உங்கள் வீட்டை பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று தெரிவித்தது. இப்படி பெரும்பாலான வங்கிகள் வீட்டுக்கடன் மீது மேலும் கடன் வாங்குவதை ஊக்குவித்து வந்தன.

இந்த விளம்பரங்கள்தான் சராசரி அமெரிக்கர்களை வீட்டுக்கடனுக்குள் தள்ளியது. சமூகவியல் நிபுணர்கள் மற்றும் விளம்பரத்துறை வல்லுனர்கள் வங்கிகள் தங்களது விளம்பரங்களின் மூலம் வீட்டின் மீது மேலும் மேலும் கடன் வாங்க ஊக்குவித்து பாதிப்பை ஏற்படுத்திய தாக குற்றம் சாட்டுகின்றன. ஆனால் வங்கிகள் இதனை மறுக்கின்றன.

வீட்டின் மீதான மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வந்த நிலையில், எப்படியும் வீட்டை விற்றாவது கடனை அடைத்து விடலாம் என்ற தைரியம் இருந்ததால் வாடிக்கை யாளர்களும் வங்கிகள் அளித்த கடனை துணிந்து பயன்படுத்திக் கொண்டனர். வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்த கடன் வாங்கும் தேவை மற்றும் கடன் பழக்கத்தையே தாங்கள் ஊக்குவித்ததாக அவை தெரிவிக்கின்றன.

ஆனால் வங்கிகள் இத்தகைய விளம்பரங்களை வெளியிடும் போதே, நிபுணர்கள் இதனை விமர்சிக் காமல் இல்லை. அப்போது நிதித்துறை நிபுணர்கள், வீட்டுக்கடன் மீது கடன் பெறுபவர்கள் அதனை நல்ல முதலீடாகவே பயன்படுத்திக் கொள் வார்கள். எனவே கவலைப்பட வேண் டியதில்லை என்று பதிலளித்துள்ளனர்.

ஆனால் அமெரிக்கர்கள் தங்களது கிரிடிட் கார்டு கடனை அடைக்கவும், மாதச் செலவை ஈடுகட்டவும் இந்த கடனை பயன்படுத்தி வந்தனர். அது மட்டுமல்ல, ஒரு சில வங்கிகளின் விளம்பரங்கள், வீடு மீது கிடைக்கும் பணத்தை கொண்டு சொகுசாக வாழலாம் என்பது போல ஆசை காட்டியதையும் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

எலிசபெத் வாரன் எனும் சட்டப் பேராசிரியர் இத்தகைய விளம்பரங்கள் குறித்து விரிவான ஆய்வு செய்திருக் கிறார். “உறங்கி கொண்டிருக்கும் உங்கள் வீட்டின் சமபங்கை பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்பது போன்ற விளம்பர வாசகங்கள் மறைமுகமாக கடன் வாங்குவதை ஊக்குவிப்பவையே அன்றி வேறில்லை என்று திட்டவட்டமாக கூறுகிறார்.

மார்க்கெட்டிங் துறை நிபுணர்கள் மற்றொரு முக்கிய விஷயத்தை சுட்டிக் காட்டுகின்றனர். 2வது அடமானம் என்று சொல்லும் போது அது அத்தனை கவர்ச்சிகரமாக தோன்றவில்லை. அதோடு வாடிக்கையாளர்களுக்கு இதில் இயல்பான தயக்கமும் இருக்கிறது. ஆனால் சமபங்கு கடன் என்று சொல்லும் போது அது ஏற்புடையதாகி விடுகிறது. இதனை அறிந்தே வங்கிகள் இந்த சொற்றொடரை பயன்படுத்தி கடன் வாங்க ஊக்குவித்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங் கள் ஒரு போல செயல்பட்டு முழுவதும் சொந்தமாகாத, கடனில் உள்ள வீட்டின் மீது புதிதாக கடன் வாங்குவதை இயல்பான விஷயமாக மாற்றியதாகவும் குற்றஞ்சாட்டப் படுகிறது.

 
 

வங்கிகள் இந்த வகை கடனை ஊக்குவிக்க காரணமில்லாமல் இல்லை. மற்ற நுகர்வோர் கடனை விட இந்த வகை கடன்களில் கிடைக்கும் வருவாய் அதிகம். அதோடு, ஏற்கனவே சுட்டிக் காட்டப் பட்டிருப்பது போல வீட்டுக்கடன் களை ஒரு தொகுப்பாக்கி முதலீட்டு வாய்ப்பாக விற்று வருவாய் ஈட்டுவதும் சுலபமாக இருந்தது.

எது எப்படியோ, அமெரிக்கர்கள், எதையும் யோசிக்காமல் கடனில் வீடு வாங்கி விட்டு அந்த வீட்டை கொண்டே மேலும் கடன் வாங்கி இரண்டையும் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வந்தனர். அதன் விளைவாக இன்று அமெரிக்க பொருளாதாரமும் திணறி கொண்டிருக்கிறது.

 

நுகர்வோர் யுகத்தின் எழுச்சி-18

வங்கிகள் உள்ளிட்ட நிதி அமைப்புகள் கடன் வலை வீச தயாராவதற்கு முன்பாக அமெரிக் கர்களை நுகர்வோர் யுகம் தழுவக் காத்திருந்தது. அதாவது கடன் வாங்குவதற்கு முன் அமெரிக்கர்கள் பொருட்களை வாங்கி மகிழ பழக்கப்படுத் தப்பட்டனர். வாங்கும் பழக்கம் இன்பமாக மாறிய நிலையின் விளைவாக கடன் இனிக்கத் தொடங்கியது. உலக நுகர்வோர் தலைநகராக அமெரிக்காவை உருவாக்கும் நுகர்வோர் யுகம் இரண்டாம் உலகப் போருக்கு பின் தொடங்குகிறது.

.
முதல் உலகப் போருக்கு பிறகு 1929ல் பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டு அமெரிக்கா மாபெரும் தேக்க நிலையை சந்தித்தது. பல ஆண்டுகள் இந்த தேக்க நிலை நீடித்து, அமெரிக்கா பொருளாதார ரீதியாக மீண்டு கொண்டிருந்த நிலையில் 1939ல் இரண்டாம் உலகப் போர் மூண்டது.

 திவாலாகும் குடும்பங்கள்

அமெரிக்க நிறுவனங்கள் திவாலாவதை விட்டுத் தள்ளுங்கள். அந்நாட்டில் சராசரி அமெரிக்க குடும்பங்கள் திவாலாகும் ஆபத்து அதிகரித்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அமெரிக்கர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கடனின் விளைவாக 2000மாவது ஆண்டுக்கு பிறகு தனிநபர்கள் திவாலாவது கணிசமாக உயர்ந்துள்ளது.

2003வது ஆண்டில் 1,133,622 அமெரிக்க குடும்பங்கள் திவாலாகும் நோட்டீஸ் கொடுக்க விண்ணப்பித் துள்ளன. குடும்பங்கள் திவாலாகும் நிலை ஏற்படுவது ஏன்? என்று ஆய்வு செய்து புத்தகங்களை வெளியிடும் நிலை இருக்கிறது. 1981ஆம் ஆண்டுக்கு பிறகு, பெண்கள் திவாலாவதும், அச்சமூட்டக் கூடிய அளவுக்கு அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் பிள்ளைகள், தங்களது பெற்றோர்கள் விவாகரத்து பெறுவதை பார்ப்பதை விட அவர்கள் திவாலாவதை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

 நமக்கான பாடம்

அமெரிக்காவில் நுகர்வோர் கலாச்சாரம் வலுப்பெற்றது தொலைக்காட்சிகளின் பங்கு முதன்மையானது.

நூற்றுக்கணக்கான டிவி சேனல்கள் மற்றும் அவற்றின் மூலம் ஒளிபரப்பான (ஒரே மாதிரியான) நிகழ்ச்சிகள் அமெரிக்கர்களுக்கு சுவாரசியத்தை அளித்தனவோ இல்லையோ அவர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறை பற்றிய செய்தியை மறைமுகமாக உள்ளத்தில் விதைத்து கொண்டிருந்தன.

எப்படி வாழ வேண்டும் என்பதை டிவியில் வரும் குடும்பங்களே அமெரிக்கர்களுக்கு உணர்த்தி வந்தன. ஒருவிதத்தில் வாங்கும் பழக்கத்தையும் இவையே ஊக்குவித்தன.
நம்ம ஊரில் டிவி நிகழ்ச்சிகளில் வரும் பாத்திரங்கள் பிரத்யேகமாக அணியும் புடவைகள் மற்றும் உடைகள் பற்றி நமது இல்லத் தலைவிகள் பேசி மகிழ்வது தற்செயலானதல்ல.
நுகர்வோருக்கான செய்தி அங்கு வெற்றிகரமாக விவாதிக்கப் படுகிறது என்று பொருள்.

——-

போருக்கு ஆயுதத் தீனி போடுவதற்காக அமெரிக்க அரசு பீரங்கிகளையும், விமானங்களையும் தயாரிப்பதற்கான தொழிற்சாலை களில் பெருமளவு முதலீடு செய்தது.
மேலும் போர் காலத்தில் சராசரி அமெரிக்கர்கள் செலவுகளை குறைத்து சிக்கனமாக இருக்க வலியு றுத்தப்பட்டனர். ஒரு சில பொருட்கள் பொதுமக்களின் உப யோகத்திற்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.

உதாரணத்திற்கு பிளாட்டினம் உலோகத்தை நகை செய்ய பயன்படுத்த தடை விதிக்கப்ப ட்டது. பல பொருட்கள் ரேஷன் முறையில் உபயோகிக் கப்பட்டன.
காபி, சர்க்கரை, இறைச்சி, வெண்ணெய் மற்றும் பதப்படுத்தப் பட்ட காய்கறிகள் ஆகியவை ராணுவ உபயோகத்திற்கென்று ஒதுக்கப் பட்டன. அமெரிக்கர்கள் தங்கள் சொந்த உபயோகத்திற்கான காய்கறி களை வீட்டிலேயே பயிரிட்டுக் கொள்ள ஊக்கப்படுத்தப்பட்டனர். இவை “வெற்றித் தோட்டங்கள்’ என்று அழைக்கப்பட்டன.

1942ம் ஆண்டு யுத்த தயாரிப்பு வாரியம் அமைக்கப்பட்டது. போர் தொடர்பான பொருட்கள் உற்பத்தியை இந்த வாரியம் மேற்பார்வையிட்டது. இந்த வாரியம் மேற்கொண்ட முதல் நடவடிக்கை அனைத்து வாகன தயாரிப்பையும் நிறுத்தி விட்டு வாகன ஆலைகளை விமானங்கள் மற்றும் பீரங்கிகளுக்கு தேவையான எஞ்சின்களை உருவாக்கும் ஆலைகளாக மாற்றியதுதான்.

மற்ற நுகர்வோர் தயாரிப்பாளர்களும் போர் தொடர்பான பணிகளில் ஊக்குவிக்கப்பட்டனர். ராணுவ வீரர்களுக்கான சீருடைகளை தயாரிப்பதற்காக அமெரிக்கர்கள் பயன்படுத்திய துணிரகங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

பட்டு இழையிலான காலுறைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஆண்களும், பெண்களும் சிக்கனமாக உடை உடுத்த ஊக்கமளிக்கப் பட்டனர். இந்த ஆடைகள் “வெற்றி ஆடைகள்’ என்று வர்ணிக்கப்பட்டன.

இவ்வளவு ஏன்? பெண்கள் டூபீஸ் நீச்சல் உடைகளை அணியவும் ஊக்குவிக்கப்பட்டனர்.
இப்படி அமெரிக்காவே உற்சாகமாக போரில் பங்கேற்ற நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 1945ல் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

இதனிடையே அமெரிக்கா பொருளாதார தேக்க நிலையிலிருந்து மீளவும் தொடங்கியிருந்தது. வேலை வாய்ப்பு விகிதம் உயர ஆரம்பித் திருந்தது. உலகப் போர் முடிந்த பிறகு அமெரிக்கர்கள் மத்தியில் ஒருவித உற்சாகமான மனோ நிலை காணப்பட்டது. அப்போது தொடர்ந்து சிக்கன பழக்கத்தையே கடைப் பிடிப்பதா? அல்லது அதிலிருந்து விடுபட்டு முழுவீச்சில் நுகர்வோர் ஆவதா? எனும் குழப்பம் அமெரிக்கர்கள் மத்தியில் இருந்தது.

அதே நேரத்தில் அமெரிக்க அரசு போரிலிருந்து திரும்பிய ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக, வளர்ச்சி பெற தொடங்கியிருந்த வர்த்தக நிறு வனங்களோடு இணைந்து நுகர்வோர் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்பட்டது.
செலவிடுவது என்பது ஒரு தேசிய கடமையாக, நாட்டுப் பற்றின் வெளிப்பாடாக உணர்த் தப்பட்டது. இந்த காலத்தில் தான் சோவியத் யூனியனின் எழுச்சி காரணமாக பனிப்போர் தொடங்கியிருந்தது.

சோவியத் பாணியிலான சோஷியலி சத்திற்கு மாறாக அமெரிக்க பாணி சுதந்திர சந்தையின் அருமையை எடுத்துரைப்பதற்காக மக்கள் வாங்கி மகிழ ஊக்குவிக்கப் பட்டனர்.
பரவலாக பொருட்களுக்கு உரிமை யாளர்களாவது சமத்துவத்தை ஏற்படுத்தி, சந்தையில் ஆதிக்கத்தை அளிக்கும் என்று எண்ணம் உண்டானது. நுகர்வோர் கலாச்சாரமே கம்யூனிசத்திற்கான சரியான பதிலடியாக கருதப்பட்டது.

வாங்குவதற்கு ஊக்கமளிக்கப்பட்ட அமெரிக்கர்களின் பட்டியலில் சொந்த வீடு முதலிடம் பெற்றிருந்தது. புறநகர் பகுதிகளில் ஒற்றை குடும்பங்கள் வசிக்கக் கூடிய வீடுகள் அடுக்கடுக்காக கட்டப்பட்டன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கட்டுமான துறை சுறுசுறுப்பாக இயங்கிய நிலையில் அரசு உத்தரவாதத்தோடு வீட்டுக்கடன்கள் வழங்கப்பட்டன.

வீடுகளுக்கு அடுத்தபடியாக அமெரிக்கர்கள் சொந்த கார்களை விரும்பி வாங்கினர். புறநகர் பகுதிகள், திட்டமிட்டு உருவாக்கப்பட்டதால் நகருக்கு வந்தபோது தனிநபர் போக்கு வரத்துக்காக கார்களே சிறந்தது எனும் கருத்து ஏற்படுத்தப்பட்டு அமெரிக்காவில் கார் கலாச்சாரம் பிறந்தது.

கார் பயணங்கள் போக்குவரத்தை அதிகமாக்கி, வர்த்தக வாய்ப்பு களையும் பெருக்கியது. அதே நேரத்தில் செலவுக்கான தேவை களையும் அதிகமாக்கியது. பயணங் களின் போது சாப்பிடக் கூடிய துரித உணவகங்கள் மற்றும் நெடுஞ்சாலை ஓட்டல்கள் அமெரிக்கா முழுவதும் முளைத்தன.

நெடுஞ்சாலைகளில் அமெரிக்கர் களை கவர்ந்திழுக்கும் வணிக வளாகங்களும் தோன்றின. 1950ஆம் ஆண்டு வாக்கில் 60 சதவிகிதம் அமெரிக்கர்கள் சொந்தமாக கார் வைத்திருந்தனர்.
இவற்றுக்கு மத்தியில் தொலைக் காட்சி அறிமுகமாகி அமெரிக்கர் களின் தினசரி வாழ்க்கையில் முக்கிய இடம் பிடித்தது.

தொலைக்காட்சியும் ஒரு சமத்துவ காரணியாகவே முன்வைக்கப்பட்டது. அமெரிக்க சுதந்திரத்தின் அடையா ளமாக தொலைக்காட்சி கருதப்பட்டது.

ஆண்டுதோறும் தொலைக்காட்சி வாங்குபவரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வந்தது. சேனல்கள் அதிகரித்து டிவி நிகழ்ச்சிகளின் வாயிலாக நுகர்வோர் கலாச்சாரம் பற்றிய மறைமுக செய்திகள் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. நேரடியாக விளம் பரத்தின் மூலமும் நுகர் வோருக்கான செய்திகள் வழங்கப்பட்டன.

நுகர்வு கலாச்சாரத்தின் வேர்கள் ஆழமாக ஊடுருவ தொடங்கிய நிலையில் அமெரிக்கர்கள் மத்தியில் போட்டிக்காக பொருட்களை வாங்கும் பழக்கமும் சமூக குணமாக உருவானது.
பொதுவாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை பார்த்து அவர்கள் வைத்திருக்கும் பொருட்களை நாமும் வாங்க வேண்டுமென்ற இயல்பு ஏற்படுவது சகஜம்.

ஆனால் அமெரிக்காவில் தொலைக்காட்சி மற்றும் ஹாலிவுட் படங்களின் பாதிப்பின் விளைவாக வெகு தூரத்தில் வசிப்பவர்களோடு, தங்களை ஒப்பிட்டுக் கொண்டு அவர்களின் வாழ்க்கை தரத்திற்கு நிகராக தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளும் தன்மை ஏற்பட்டது.

தங்களுக்கு அந்த பொருட்களை வாங்கும் சக்தி இருக்கிறதா என்பதை யோசிக்காமலேயே அமெரிக்கர்கள் மற்றவர்கள் பயன்படுத்திய பொருட் களை தாங்களும் பயன்படுத்த தொடங்கினர்.

ஒரு புள்ளி விவர கணக்கின்படி அமெரிக்காவில் உள்ள 27 சதவிகிதம் பேர் தங்களது தகுதிக்கு மீறி ஆண்டுதோறும் ஒரு லட்சம் டாலர் மதிப்பிலான பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர். 20 சதவிகிதம் பேர் தங்களது வருமானம் முழுவதையும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் செலவிடுகின்றனர். இப்படி அமெரிக்கர்கள் நுகர்வோர் களாக மாறி பொருட்களை வாங்கி குவிக்க தயாராக மாறியிருந்தனர். இந்த பின்னணியில்தான் வங்கிகள் கடன்களை வீச தொடங்கின.

சேமிப்பே போ! கடனே வா! –17

கடன் வாங்குவது நல்லதே என்று அமெரிக்கர்கள் நம்ப வைக்கப்பட்டனர். ஒரு விதத்தில் இது சரியானதும் கூட. நுகர்வோருக்கு சுலபமாக கடன் கிடைக்கும் போது அவர்கள் தேவையும், விருப்பமும் நிறைவேற வாய்ப்பு உண்டாகிறது. கடன் வாய்ப்புகளையும், செலவழிக்கும் சுதந்திரத்தையும் சேர்த்தே வழங்குகிறது.

.
ஆனால் நுகர்வோர் கடன் என்பது இரு பக்கமும் கூறான கத்தியைப் போல் கவனமாக கையாள வேண்டும். இல்லையென்றால் அதிலிருந்து மீளுவது கடினம்.

சூழ்நிலை அல்லது தவறான முடிவுகள் காரணமாக மீளாக்கடனில் பல தனிமனிதர்கள் மாட்டிக் கொண்டு தவிப்பதுண்டு. ஆனால் அமெரிக்காவைப் போல பெரும் பாலானோர் தெரிந்தே கடன் வலையில் மாட்டிக் கொண்டு விழிப்பது மிகவும் அரிதானது.

 சேமிப்பு வேதம்

அமெரிக்கா வரலாற்றில் எத்தனையோ தேசத் தலைவர்கள் தோன்றியுள்ளனர் என்றாலும் அவர்களில் பெஞ்சமின் பிராங் கிளினுக்கு தனி இடம் உண்டு.

சிறந்த கண்டுபிடிப்பாளராகவும், விஞ்ஞானியாகவும் திகழ்ந்த பிராங்கிளினுக்கு பல பரிமாணம் உண்டு. நவீன அமெரிக்காவின் சிந்தனையை உருவாக்கியதில் அவருடைய பங்களிப்பு அதிகம். அமெரிக்கர் களுக்கு வழிகாட்டி யாக அமைந்த அவர், சேமிப்பை யும், சிக்கனத்தை யும் ஆகச்சிறந்த வழிகளாக முன்வைத்திருக்கிறார்.

செல்வதற்கான வழி எனும் தலைப்பில் அவர் எழுதிய 16 பக்க கையேட்டில், சேமிப்பின் அருமையை வலியுறுத்தி இருக்கிறார்.

தேவையில்லாத எந்த பொரு ளையும் வாங்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல விஷயங் களை பெஞ்சமின் பிராங்கிளின் அந்த கையேட்டில் குறிப்பிட்டிருக்கிறார். ஆரம்ப காலத்தில் அமெரிக்கர்கள் பிராங்கிளின் கருத்துக்களை வேதமாக கருதி பின்பற்றியும் வந்தனர். 

சாதாரண கடன் நெருக்கடியின் போது அமெரிக்காவின் வீட்டுக்கடன் வலையில் லட்சக்கணக்கானோர் சிக்கிக் கொண்டு தவித்த விதம் உலகின் கவனத்தை ஈர்த்து திகைக்க வைத்தது. எனினும் அதற்கு முன்னரே கூட அமெரிக்கர்கள் தாளாத கடன் சுமையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர்.

2004 ஆம் ஆண்டில் ஒவ்வொரு அமெரிக்க குடும்பமும் சராசரியாக தனது வருமானத்தில் 18 சதவிகிதத்தை கடனாக கட்டிக் கொண்டிருந்ததாக அமெரிக்க அரசு வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதோடு 40 சதவிதத்திற்கும் அதிக வருமானத்தை கடனுக்காக செலவிடும் குடும்பங்களின் எண்ணிக்கை 12.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. குறைந்த வருவாய் கொண்ட நடுத்தர வர்த்தக குடும்பங்கள் மத்தியில் இந்த விகிதம் இன்னும் அதிகமானது. (2005, 2006 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்க குடும்பங்களின் வருமானத்தை விட அவற்றின் கடன் தொகையை அதிகரித்திருக்கிறது).

அமெரிக்காவில் கடன்படாத குடும்பங்களே கிடையாது என்றும் சொல்லலாம். இது அமெரிக்காவுக்கு மட்டுமா பொருந்தும்? எல்லா சமூகங்களிலும்தான்கடன் வாங்கும் பழக்கம் இருக்கிறது.

உண்மைதான். ஆனால் அமெரிக்காவில் என்ன பிரச்சனை என்றால் கடனோடு தொடர்புடைய எச்சரிக்கை உணர்வு மற்றும் அச்சம் இல்லாமல் போனதுதான். பொதுவாக கடன் வாங்குபவர்கள் அதனை சுமையாக கருதி உடனே இறக்கி வைத்து விடவே விரும்புவார்கள். கடன் அளவுக்கு மிஞ்சினால் தூக்கம் கெட்டுப் போகும். அதோடு கடன் என்பது கூடியவரை தவிர்க்க வேண்டிய விஷயமாகவே கருதப்படுகிறது.

தலைக்கு மேல் கடன் வாங்கி திண்டாடுவது என்பது தலைக்குனிவானதாக அமைந்து விடும். அமெரிக்காவிலோ கடன் வெகுஜனமயமாக்கப்பட்டு கடன்படு வது தொடர்பான அவமான உணர்வு மறைந்து போனது. கடனில் இருந்து விடுவதே நிம்மதி என்ற எண்ணத்திற்கு மாறாக மேலும் மேலும் கடன் வாங்க அமெரிக்கர்கள் தயாராக இருந்தனர்.
அமெரிக்க வங்கிகள் இதை விரும்பினால் என்பது மட்டுமல்ல, இந்த நிலையை உருவாக்கியதில் அவற்றின் பங்கும் கணிசமானது.

நிற்க! அமெரிக்கா எப்போதுமே இப்படி கடனுக்கு அடிமையாக இருந்ததில்லை. அந்நாட்டிலும் சிக்கனமும், சேமிப்பும் போற்றி பின்பற்றப்பட்டு வந்த காலம் உண்டு. சிக்கனத்தை கடைபிடிப்பதே அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையாகவும் இருந்தது.

சிக்கனம், பழைய அமெரிக்காவின் தேசிய குணமாக இருந்ததாகவும் சொல்லலாம். அமெரிக்காவில் சிக்னம்  “திரிப்ட்’ என்னும் சொல்லை கொண்டே அழைக்கப்பட்டது. இது சிக்கன பழக்கத்தை மட்டும் குறிக்கும் சொல்லாக இருக்கவில்லை.

சிறு சேமிப்பிற்கான வங்கிகளும் நிதி அமைப்புகளும் “திரிப்ட்’ என்றே கம்பீரத்தோடு குறிப்பிடப்பட்டன. இத்தகைய சிறு சேமிப்பு வங்கிகள் அமெரிக்கா முழுவதும் செயல்பட்டன.
பல நகரங்களில் பொதுமக்களே ஒன்று கூடி சமூக சேமிப்பு அமைப்புகளை கூட்டுறவு முறையில் நிறுவி இயக்கியும் வந்தனர். சராசரி அமெரிக்கர்கள் நிறைய சேமித்தனர். கவனத்தோடு கடன் வாங்கி வந்தனர். மேலும் அமெரிக்காவில் பெரிய வங்கிகள் விஸ்வரூபம் எடுப்பதற்கு முன் சேமிப்பை அடிப்படையாக கொண்டு செயல்பட்ட சிறிய வங்கிகள் சேமிப்பு மற்றும் கடன் வங்கிகள் என்றே அழைக்கப்பட்டன.

வீட்டுக்கடன் வாங்கியவர்கள் அந்த தொகையை முழுவதும் அடைத்து விட்டு கடனில் இருந்து விடுதலையானதை கொண்டாடும் வகையில் விருந்து கொடுப்பதும் கூட பழக்கமாக இருந்தது. அதே போல் பொதுவாக சில வேலைகளை செய்து முடிக்க ஒன்றாக செயல்படுவதும் வாடிக்கையாக இருந்தது. இந்த நிகழ்ச்சிகள் அமெரிக்கர்கள் தங்கள் இயன்ற வேலையை செய்து மற்றவர் களுக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

நிச்சயமாக அப்போதும் கடன் வாங்கும் பழக்கம் இருந்தது. கடன் கொடுக்க பல ஏற்பாடுகளும் அமைப்பு களும் இருந்தன. ஆனால் கடன் வாங்குவதை ஊக்குவிக்கப் படவில்லை. எனவே சராசரி அமெரிக்கர்கள் கடன் வாங்க தயங்கினர். அது மட்டு மல்லாமல் அதிக வட்டிக்கு கடன் வழங்கியவர்கள் கடன் முதலைகள் என்றும், உழைப்பை உறிஞ்சும் அட்டைகள் என்றும் வெறுப்புடனே குறிப்பிடப்பட்டனர். இத்தகைய அமைப்புகளுக்கு நகரின் மைய பகுதிகளில் இடம் கொடுக்கப்பட்ட தில்லை. ஊருக்கு வெளியே அவை தள்ளப்பட்டன. எனவே அவற்றை அணுகுவது என்பதே ஒரு தரக்குறைவான அம்சமாக சமூக இழிவாக கருதப்பட்டு வந்தது. ஆசை காட்டி அதிக கடன் வழங்குவதை தடுக்கும் வகையில் பல மாநிலங்களில் கடுமையான சட்டங்களும் அமலில் இருந்தன.

வங்கிகள் தங்கள் பங்கிற்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்தன. இன்று கல்லூரிகளுக்கு சென்று கடன் அட்டை பெறுமாறு பிரச்சாரம் செய்யும் வங்கிகள் அந்த காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சேமிப்பின் மகத்து வத்தை புரிய வைக்க பாடுபட்டன.

இவையெல்லாம் மற்ற நாட்டவருக்கு மட்டுமல்ல, தற்கால அமெரிக்க தலைமுறைக்கே கூட ஆச்சரியத்தை அளிக்கலாம். அந்த அளவுக்கு நவீன அமெரிக்க சமூகம் சேமிப்பு கலாச்சாரத்தில் இருந்து அந்நியமாகி விட்டது.

இன்றைய அமெரிக்கர்கள் சிக்கனம் என்பதை வறுமையோடு தொடர்பு படுத்தி இழிவாக பார்க்கின்றனர். சிக்கனம் என்பதை பழைய உடைக ளாகவும், வேண்டாத பொருட்களாகவும் அமெரிக்க இளைய தலைமுறை கருது கிறது. கை மேல் கடன் கிடைக்கும் போது சேமிப்பே கூட ஒரு சுமை என்ற எண்ணம் அவர்கள் மனதின் மூளையில் இருக்கிறது.

ஒரு காலத்தில் வீடு வாங்க கடன் வாங்குவது என்றால் கூட முதலில் சேமிக்கத் தொடங்கி கையில் முன்பணமாக ஒரு தொகையை வைத்துக் கொண்டே கடன் வாங்க முற்பட்டனர். இந்த அமெரிக்கா எங்கே, நிலையான வருமானத்திற்கு வழியில்லாதவர்கள் கூட தகுதிக்கு மீறி துணிந்து வீட்டுக்கடன் பெற்ற அமெரிக்கா எங்கே! இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது தெரியுமா? ஒரு பக்கம் நுகர்வோர் 

கலாச்சாரம் எழுச்சி பெற்ற நிலையில் இன்னொரு பக்கம் அமெரிக்க நிதித் துறை கடன் வாங்க பழக்கத்தை திட்டமிட்டு ஊக்கு வித்து சேமிப்பு சார்ந்த அமைப்பு களை பின்னுக்கு தள்ளின. இதனால் உண்டாகக் கூடிய விபரிதத்தை அமெரிக்கா அறிந்திருக்கவில்லை..

ஒரு தேசம் கடன்படுகிறது-16

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள  பொருளாதார சீர்குலைவுக்கு வீட்டுக்கடன் நெருக்கடியே பிரதான காரணம்! ஆனால் வல்ல ரசான அமெரிக்காவின் பொருளா தாரம், மீள முடியாத பாதிப்பிற்கு உள்ளானதற்கு, வீட்டுக்கடன் நெருக்கடி மட்டும்தான் காரணமா? ஒரு பிரச்சனை, இப்படி ஒட்டு மொத்த தேசத்தையே தள்ளாடச் செய்துவிடுமா?

இந்த கேள்விகளுக்கான பதில் அமெரிக்காவின் இன்னொரு பக்கத்தில் இருக்கிறது. அந்த இன்னொரு பக்கம் கடனில் மூழ்கி கிடக்கிறது. ஆம் அமெரிக்கா ஒரு தேசமாக கடன்பட்டு கிடப்பதோடு, கட னாளிகளின் தேசமாகவும் மாறி இருக்கிறது.

 வீடுகளே ஏடிஎம்கள்

தந்தையே எனது ஏடிஎம்கள் நம்மூர் இளைஞர்கள் வேடிக்கையாக கூறுவது உண்டு.
கை செலவுக்கான பணத்தை அப்பாவிடம் இருந்து வாங்கிக் கொள்வது தான் இப்படி குறிப்பிடுகின்றனர்.

இது வெறும் நகைச்சுவை மட்டுமல்ல. செலவுக்கான தொகை உரியவர்களிடம் இருந்து வரவேண்டும் என்ற நமது நம்பிக்கையும், உணர்த்துவதாக இருக்கிறது.

ஆனால் அமெரிக்கர்களோ தங்களது வீடுகளையே ஏடிஎம்  மையங்களாக பயன்படுத்தி வருகின்றனர். அதாவது வீட்டின் மீது கடன் வாங்கி இருந்தாலும், அந்த வீட்டைக் கொண்டே மேலும் கடன் வாங்கி கிரிடிட் கார்டு உள்ளிட்ட கடன்களை அடைக்கவும் மற்ற வீட்டுச் செலவுகளை பூர்த்தி செய்யவும் பயன்படுத்தி வருகின்றன.

வீட்டின் மதிப்பை அடிப்படையாக வைத்துக் கொண்டு வங்கிகளும், இப்படி தாராளமாக கடன் வழங்கி வந்திருக்கின்றன. 

ஒரு தேசமாக எடுத்துக் கொண் டாலும் அமெரிக்காவின் கடன் விகிதம் அதிகம். அமெரிக்காவின் தேசியக்கடன், இப்போது 9 லட்சம் கோடி டாலர்களாக இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இது 5 லட்சம் கோடி டாலர்களாக மட்டுமே இருந்தது. 

நுகர்வோராக அமெரிக்கர்களின் கடனும் அதிகமாகவே இருக்கிறது. அமெரிக்கர்களின் நுகர்வோர் கடன் 2.5 லட்சம் கோடி டாலர்களாக இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்கா கம்பீரமாக, கவுரவமாக உலகிடம் கையேந்திக் கொண் டிருக்கிறது. அமெரிக்கா வெளியி ட்டுள்ள அரசு பத்திரங்களின் 45 சதவீதம் வெளிநாடுகளின் வசம் இருக்கிறது. 1994ம் ஆண்டில் இது 20 சதவீதமாக மட்டுமே இருந்தது. 

பணக்காரர்கள் வாங்கும் கடனுக்கு நிகரானது இது. பொருளாதார வல்லரசு என்னும் அந்தஸ்த்தில் அமெரிக்கா பெருமையோடு வாங்கிக் கொண்டிருக்கும் கடன்! சர்வதேச பொருளாதார சமன் பாட்டில் (இதுவரை) அமெரிக் காவின் கையே ஓங்கியிருப்பதால், சுலபமாக அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையில், அமெரிக்கா பத்திரங்களை வெளியிட்டு கடன் பெற்று வருகிறது.

இந்த புள்ளி விவரங்களை விட, அமெரிக்கர்களுக்கும், கடனுக்குமான உறவு திகைக்க வைப்பதாக இருக் கிறது.  அமெரிக்காவில் கடன் என்பது எத்தனை சுலபமாகவும், தவிர்க்க இயலாததாகவும் இருக்கிறது என்பது தெரிந்து கொள்ள முற்பட்டால் வியப்பே ஏற்படும்.

அமெரிக்கர்கள் மத்தியில் கடன் சர்வசகஜமாக இருக்கிறது என்றும் சொல்லலாம். இதையே வேறு விதமாகச் சொல்வதனால் அமெரிக் கர்கள் கடனுக்கு அடிமையாகி இருப்பதாகவும் சொல்லலாம்.

இவை ஏதோ அமெரிக்காவை வெறுப்பவர்களும், விமர்சிப்பவர் களும் முன் வைக்கும் கருத்தல்ல. அந்நாட்டில் உள்ள நிபுணர்களே கவலையோடு முன் வைக்கும் சுய விமர்சனம் இது. அமெரிக்கா எந்த அளவுக்கு  கடன் கலாச்சாரத்தில் மூழ்கி இருக்கிறது என்பதை அந்நாட்டு சிந்தனையாளர்கள் பலரே கவலையோடு சுட்டிக் காட்டியும், எச்சரித்தும் வருகின்றர்.

இதனை  பிரபல பத்திரிகையாளரும் விமர்சகருமான டோனி ஸ்கிக்டர் இன் டெப்ட்  வீ டிரஸ்ட்  என்னும் டாக்கு மென்டரியில் மிகவும்  விரிவாக படம் பிடித்து காட்டியிருக்கிறார். நிறுவன ங்களும், வங்கிகளும் கடன் வாங்க தூண்டிக் கொண்டே இருப்பதாகவும், இதனால் அமெரிக்கர்கள் தங்களால் சமாளிக்கக் கூடியதை விட அதிகபடியான கடனுக்கு அளாகி தவிப்பதையும் இந்த டாக்மென்ட்ரி விவரிக்கிறது.

அமெரிக்கர்கள் அதிகப்படியான கடனுக்கு ஆளாகி இருப்பதுகூட வியப்பில்லை. ஆனால் அவர்கள் அதனை மிக மிக இயல்பாக எடுத்துக் கொள்வது தான் உண்மையில் திகைப்பூட்டுவது. அதாவது அதிகமான கடனையும் சர்வசகஜமாக கருத அமெரிக்கர்கள் பழக்கப் படுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க கலாச்சாரம் செயல்படும் விதம் அப்படித்தான் இருக்கிறது. 

கடன் பட்டார் நெஞ்சம் போல என்று கம்பனும், கடன் அன்பை முறிக்கும் என்று கடைக்காரர்கள் எழுதி வைப்பதற்கும் பழக்கப்பட்டவர்கள் நாம்! ஆனால் அமெரிக்கர்களோ இன்றைய கடன் நாளைய வளம் என்று நினைத்து இயல்பாக கடன் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். கடனே அங்கு வாழ்க்கையாக இருக்கிறது.

கிரிடிட் கலாச்சாரத்தில் ஊறிப்போய் இருக்கும் தேசமாக அமெரிக்கா விளங்குகிறது.  
பொருட்களை வாங்கி கிரிடிட் கார்டை பயன்படுத்துவது சவுகர்யம் கருதி மட்டுமல்ல. அமெரிக்கர்களின் வாங்கும் முறையே அது தான். இன்று கடன் வாங்கி நாளை கட்டிக் கொள்ளலாம் என்பது அமெரிக்கர்கள் நினைக்கின்றனர்.

நாளை கட்ட முடியா விட்டால் அதற்கும் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். கடனை அடைக்க கடன் வாங்கும் விஷயத்தில் அமெரிக்காவில் பெரும் பாலும் கண்ணதாசன்களாகவே இருப்பாகவும் சொல்லலாம்.

எல்லோரும் கிரிடிட் கார்டு வைத்திருப்பதும்,  (உண்மையில் ஒன்று மேற்பட்ட கார்டுகள்), கார்டை கொண்டே பொருட்களை வாங்குவதும் அமெரிக்கர்களின் பழக்கமாக இருக்கிறது. பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துபவர்களை மிரளச்செய்து விடும். வாழ்க்கை முறையே  நவீன அமெரிக்காவில் இயல்பாக இருக்கிறது. விரலுக்கு தகுந்த வீக்கம் என்ற கருத்து அங்கு செல்லுபடி ஆவதில்லை.

கல்லூரி படிக்கும் போது கடன் வாங்க கற்று கொடுக்கப்பட்டு கடனாளி களாகவே சராசரி அமெரிக்கர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையை துவக்குகின்றனர். கல்லூரிகளுக்கு சென்று, மாணவர் களுக்கான பிரத்யேக கிரிடிட் கார்டுகளை விற்பது அமெரிக்க வங்கிகள்  கடை பிடிக்கும்பழக்கமாக இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு பல கிரிடிட் கார்டுகளை மனமுவந்து தரும் நடைமுறையும் இருக்கிறது.

இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், கிரிடிட் கார்டு கடனை அடைக்க முடியாவிட்டாலும் பிரச்சனை இல்லை என்ற நிலை இருப்பது தான். காரணம்.  கிரிடிட் கார்டு நிறுவனங்கள் கடன் உரிய நேரத்தில் அடைக்கப்படாமல் அது வளர்ந்து கொண்டே போவதை தான் விரும்புகின்றன. அதன் மூலம் கிடைக்கக்கூடிய அதிக வட்டி வருமானத்திற்காக, கடன் வளர்ந்து கொண்டே செல்வதை திட்டமிட்டே ஊக்குவிக்கின்றன.
எல்லோரும் கடன் வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்றே கிரிடிட் கார்டுகளை விநியோகிக்கும் வங்கிகள் விரும்புகின்றன. இது ஒன்றும் தவறல்ல என்றும் முன் நிறுத்தும் நுகர்வு கலாச்சாரம் உருவாக்கி விட்டது.

வணிக வளாகங்களில் பொருட் களை வாங்கும் போது கிடைக்கும் உடனடி திருப்தியில்,வாழ்க்கையின் சகல தேவைகளும் பூர்த்தியாகி விடுவதாக நினைத்ததைவிட பழக்கப் பட்டிருப்பதால், கடனை பலரும் பெரிய விஷயமாக நினைப் பதில்லை.

அதற்கேற்ப வங்கிகளும் காலக்கடனை தாரளமாக வழங்கின. நினைத்தபடி பொருட்களை வாங்க முடிந்தது. (அது கடனில் என்றாலும்), நடுத்தர வர்க்க அமெரிக்கர்களுக்கு, தங்களுக்கும் வாங்கும் சக்தி இருக்கிறது எனும் உணர்வை கொடுத்தது.

மேலும் கிரிடிட் கார்டை பயன்படுத்தும் போது அது ஒரு வாங்கும் முறையாக அமைகிறதே தவிர, கடன் வாங்குகிறேம் என்ற எண்ணம் ஏற்படுவதில்லை. இப்படி கடன் ஊட்டிவளர்க்கப்பட்ட அமெரிக்கர்கள் வீட்டு கடன் வலையில் தாங்களாகவே விரும்பி மாட்டிக் கொண்டனர்.

வீடுகளின் விலை உயரத் தொடங்கிய காலத்தில், வீடுகளின் விலை என்றென்றும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் என்று நம்ப வைக்கப்பட்டு சராசரி அமெரிக்கர்கள் தகுதிக்கு மீறி வீட்டுக்கடன் பெற தூண்டப்பட்டு ஊக்குவிக்கப்பட்டனர்.

ஆனால் வீட்டில் அவர்களின் சம பங்கு என்பது சொற்பமாகவே இருந்தது. அதாவது வீடு வாங்கி அவர்கள் கையில் இருந்து போட்ட பணம் மிகவும் குறைவு; அல்லது  இல்லவே இல்லை.

1945ம் ஆண்டு பிறகு அமெரிக்காவில் முதன் முறையாக வீட்டின் மீதான அமெரிக்கர்களின் சம பங்கு உரிமைத் தொகையை விட அதன் மீதான கடன் 1990களுக்கு பிறகு அதிகமாகி விட்டதாக சொல்கின்றனர்.

இந்த கடன் காலைவாரமல் என்ன செய்யும்? உலகின் பார்வைக்கு அமெரிக்கா வளமான தேசமாகவே காட்சி அளிக்கிறது. ஆனால் அந்த வளத்திற்கு கடனே அடிப்படையாக இருந்து வந்திருக்கிறது.

கடனையே அமெரிக்கர்கள் செல்வமாக கருதியும் வந்திருக் கின்றனர். இதனிடையே சேமிப்பு கலாச்சாரத்தை இழந்து நின்றனர் தெரியுமா? அதுவே அமெரிக்காவின் சிக்கலை அதிகரிக்க செய்துள்ளது.